பாஸ்போர்ட் இல்லாமல் 13 வருடமாக துபாயில் தவித்த இந்தியர்.. ஊர்திரும்ப முடியாமல் தவித்தவருக்கு கரோனாவால் அடித்த ஜாக்பாட்..!

துபாஸ் நாட்டில் பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியர் ஒருவர் 13 வருடங்களாக ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தார்.அவரிடம் அதற்கான ஆவணங்களும் இல்லை. இந்நிலையில் கரோனா அவருக்கு ஒரு ஜாக்பாட்டை கொடுக்க இந்தியா வந்திருக்கிறார் அந்த பயணி.

ஹைதராபாத்தை சேர்ந்த போத்துகொண்டா மேடி வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள்களை அனுப்பும் கல்சல்டன்ஸி ஒன்றின் மூலம் துபாய்க்கு சென்றார். சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்ற அவரை ஒரு வேலையில் சேர்த்துவிட்டு ஏஜென்ஸி கைவிட்டுவிட்டது. சுற்றுலா விசாவின் காலக்கெடு முடிந்த நிலையில் பாஸ்போர்ட் எடுப்பதற்கான எந்த ஆதாரங்களும் கையில் இல்லாமல் அவர் தவித்து வந்தார். பொதுவாகவே துபாய் நாட்டில் விசா முடிந்தும் இருப்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். ஆனால் விசா நீட்டிப்பு, பாஸ்போர்ட் ஆகியவற்றுக்கு போதிய ஆவணங்கள் இல்லாததால் போதுகொண்டா மேடி ஐய்க்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பமுடியாமல் தவித்துவந்தார்.

இந்நிலையில் கரோனாவை முன்னிட்டு அரசே விசா முடிந்து நீண்டகாலம் இருப்பவர்களுக்கு அவர்களது அபராதத்தை தள்ளுபடி செய்து ஊர்களுக்கு அனுப்பிவைத்துவருகிறது. இந்த அறிவிப்பையும், சலுகையையும் நவம்பர் 17ம் தேதிவரை அந்நாட்டு அரசு கொடுத்துள்ளது. போத்துகொண்டா 2003ல் துபாய் சென்றவர். அவர் இந்தியக் குடிமகன் என்பதற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதனால் அவருக்கு தூதரகத்தால் உதவ முடியவில்லை. இந்நிலையில் சமூகசேவகர் ஸ்ரீனிவாஸின் ஆதரவுடன் ஹைதராபாத்தில் உள்ள போத்துகொண்டாவின் குடும்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சி நடந்தது. இதில் அவரது பழைய ரேசன்கார்டு, தேர்தல் அடையாள அட்டை கிடைத்தது. அதன் மூலம் அவர் இந்தியர்தான் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் அவருக்கு நேற்று 47வது பிறந்தநாள் வந்தது. அப்போது திடீர் ஜாக்பாட்டாக ஆவணங்களை சரிபார்த்துவிட்டு அவர் சொந்த ஊருக்கு செல்லலாம் என தகவல் வர, இந்திய தூதரகம் மூலம் இலவசமாகவே அனுப்பிவைக்கப்பட்டார். இந்திய மதிப்பில் அவருக்கு ஒருகோடியை 22,936 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் இந்த பேரதிர்ஷ்டம் நடந்துள்ளது. இதனால் 13 வருடங்களுக்கு பின்பு மீண்டும் இந்தியா வந்திருக்கிறார் போத்துகொண்டா.