காவல்துறையினரையே வியக்க வைத்த 108 ஊழியர்களின் நேர்மை... அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?

விபத்துக் காலங்களில் ஆபந்தாந்தவனாக விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் உதவும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விசயம் தான். இங்கே முதலுதவியும் செய்து தங்கள் நேர்மையையும் நிரூபித்து சென்றிருக்கிறார்கள் 108 ஊழியர்கள்...

சென்னை மாதவரத்தில் இரும்பு வியாபாரம் செய்து வரும் ஒருவர் நிலுவைத் தொகைகளை வசூல் செய்து வரச் சொல்லி அவரிடம் வேலை செய்யும் ஊழியர்களை அனுப்பி வைத்தார். இந்த ஊழியர்கள் பல இடங்களிலும் வசூல் செய்துவிட்டு 69 லட்ச ரூபாய் பணத்தோடு வேலூரில் இருந்து, சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் அருகில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கார் டயர் வெடித்தது. இதில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் முரளி என்னும் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இரண்டு பேர் உயிருக்கு போராடினார்கள். இதைப் பார்த்த அந்த பகுதிமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அந்த ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளர் விஜயன், டிரைவர் சந்தானம் ஆகியோர் இவர்களை மீட்டு முதலுதவி செய்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போயினர்.

அதுபோக இந்த 108 ஊழியர்கள் காரில் கிடந்த 69 லட்ச ரூபாயையும் எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள். இவர்களின் நேர்மையைப் பார்த்து காவல்துறையினரே வாயடைத்துப் போனார்கள். மற்றவர்கள் பணத்தின் மேல் துளிகூட ஆசைப்படாமல் முதலுதவி செய்த கையோடு பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இந்த 108 ஊழியர்களின் நேர்மையை நாமும் பாராட்டலாமே...