காமராஜரே வியந்த எளிமை... காந்தி பாராட்டிய பெருமை தோழர் ஜீவானந்தம் நினைவு நாள் பகிர்வு.

பொதுவுடமைத் தலைவர் என்று அழைக்கப்படும் தோழர்.ப.ஜீவானந்தத்தின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.1907ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பிறந்த ஜீவா1963 ஜனவரி 18ம் தேதி மரணமடைந்தார். தனது நாற்பதாண்டு கால பொதுவாழ்வில் பத்து ஆண்டுகள் சிறையில் கழித்தவர் ஜீவா.

இலக்கியவாதி, பத்திரிகையாளர், சிந்தனையாளர், அரசியல்வாதி, தொழிலாளர்களின் தோழன் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கிய ஜீவானந்தத்தின் வாழ்வில் நடந்த இரு சுவாரஸ்ய சம்பவங்களைத் தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்..
ஒருமுறை காரைக்குடிக்கு வந்திருந்த தேச பிதா காந்திஜி, ராஜாஜியையும் அழைத்துக் கொண்டு, சிராவயலில் காந்தி ஆசிரமத்தைநடத்திக் கொண்டிருந்த 20 வயது இளைஞன் ஜீவாவைப் பார்க்கச் சென்றார்.

அப்போது ஜீவாவிடம் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது எனக் கேட்டார் காந்திஜீ.
உடனே சொத்தா..? அது கோடிக்கணக்கில் உள்ளது என்று சிரித்தார் ஜீவா.
கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லுங்கள் என்றார் காந்திஜி.
’இந்தியாதான் எனது சொத்து’ என்று கூறினார் ஜீவா. உடனே அதற்குப் பதிலாக ‘இல்லை ஜீவா! நீங்கள் தான் இந்தியாவின் சொத்து’ எனமனதாரப் போராட்டினார் காந்திஜி.
எளிமையின் மறுபெயர் காமராஜர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த காமராஜரே வியந்த எளிமைக்குச் சொந்தக்காரர் ஜீவா.

ஜீவாவின் வீட்டருகே உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு முதல்வர் காமராஜாரும், அன்றைய செங்கல்பட்டுமாவட்ட கலெக்டர் திரவியமும் போகும்போது ஜீவாவையும் அழைத்துச் செல்ல அவரது குடிசை வீட்டிற்கு காரில் சென்றனர்.
ஜீவா, அருகில் உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறீர்களா? என்றபடியே உள்ளே நுழைந்தார் காமராஜர் ‘.நான் வர வேண்டுமென்றால் கால் மணிநேரம் நீங்கள் காத்துக் கிடக்க வேண்டும்’ என்று உள்ளிருந்து குரல்கேட்டது.
உள்ளே ஜீவா, ஈர வேட்டியை உலர்த்தியபடி நின்று கொண்டிருந்தார். மாற்று வேட்டி கூட இல்லாமல், துவைத்த கதர் ஆடை காயும் வரை இடுப்பில் துண்டு கட்டிய நிலையில் நின்ற ஜீவாவைப் பார்த்து காமராஜர் ஆச்சர்யப்ப்ட்டுப் போனார்.
ஜீவா, எவ்வளவு நாளைக்கு இதே குடிசையில் இருப்பது? என்று கேட்டார். பளிச்சென்று பதில் கூறினார் ஜீவா.மக்களெல்லாம் மாடி வீட்டில் வாழ்கிற போது, நானும் மாடி வீட்டில் வாழ்வேன்.”என்றார்.
காமராஜரே பாராட்டிய எளிமையான பொதுவுடமைத் தலைவர் ஜீவா, குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பிறந்து, சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியில் எம்.எல்.ஏவாக வென்றார். அவரது நினைவுநாள் இன்று!
தொழிலாளர்களுக்கு அவர் பெற்றுத் தந்த உரிமைகளாலும், தீர்க்கமான குரலாலும் என்றென்றும் ஜீவாவின் பெயர் வரலாற்றில் நிலைத்துவிட்டது.