அரசு பள்ளிக்கு மாணவர்கள் வந்து போக இலவச கார்... அன்பு காட்டிய ஆசிரியருக்கு குவியும் பாராட்டு

கண்டிப்பு, கறாருடன் நடக்கும் ஆசிரியர்கள் சிலர் உண்டு. அதனோடு தன் மாணவர்கள் மத்தியில் அன்பைப் பொழியும் ஆசிரியர்களும் சிலர் இருப்பார்கள். அப்படித்தான் அன்பு ஆசிரியராக வலம் வரும் பன்னீர் தன் மாணவர்கள் போய்வர ஆம்னி காரை இலவசமாக வழங்கியுள்ளார்.

இடைக்காலங்களில் கவனிப்பாறின்றி கிடந்த அரசுப் பள்ளிகளை முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து மீட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளை தங்கள் குழந்தை போல் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ஆச்சர்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பள்ளிக்குளத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 25க்கும் அதிகமானோர் பக்கத்து கிராமமான கூத்தப்பாக்கத்தில் இருந்து வருகின்றனர். இங்கு இருந்து பள்ளி செயல்படும் பள்ளிக்குளம் கிராமத்துக்கு போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் தினமும் நடந்த பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.

இதனால் மாணவர்களின் சுமையை அறிந்த அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பன்னீர், மாணவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஆம்னிகார் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளார். பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் இந்த வாகனத்துக்கு ஓட்டுனருக்கான ஒரு வருட சம்பளம், பெட்ரோல் தொகையையும் ஏற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

இப்போது இந்த அன்பு ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.