சுற்றுலாத்தலங்களிலும் அமையுமா தாய்மார்கள் பாலூட்டும் அறை? Description: சுற்றுலாத்தலங்களிலும் அமையுமா தாய்மார்கள் பாலூட்டும் அறை?

சுற்றுலாத்தலங்களிலும் அமையுமா தாய்மார்கள் பாலூட்டும் அறை?


சுற்றுலாத்தலங்களிலும் அமையுமா தாய்மார்கள் பாலூட்டும் அறை?

தமிழகத்தில் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் முதன் முதலில் ரோட்டரி சங்கங்களின் மூலம் தென் மாவட்டங்களில் முக்கியமான பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. நாகர்கோவில், திருநெல்வேலி, இராமநாதபுரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் ரோட்டரி சங்கங்கள் இப்பணியை செய்திருந்தன. இதன் மூலம் பேருந்து நிலையங்களுக்கு கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மறைவிடம் தேடி ஒதுங்க வேண்டிய நிலை மாறியது. தொடர்ந்து இவ்விசயத்தை தமிழக அரசே கையில் எடுத்தது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்க உத்தரவிட்டார். இதன் மூலம் தாய்மார்கள், கைக்குழந்தையுடன் அதிகம் வெளியில் வருவதும் அதிகரித்தது. பெண்களுக்கும் இது மிகவும் உபயோகமான திட்டமாக இருந்தது. இதேபோல் தமிழகம் முழுவதும் முக்கிய சுற்றுலாத்தலங்களிலும் அதே போல் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைத்தால் இளவயது பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வானுயர்ந்த திருவள்ளுவர் சிலை, முக்கடலும் சங்கமிக்கும் பகுதி, விவேகானந்தர் பாறை, சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றைக் காண இங்கு நாள் முழுவதும் கூட்டம் களைகட்டுகின்றது. ஆனாலும் இங்கு தாய்மார்கள் பால் கொடுக்க மறைவிடம் தேடி ஒதுங்கும் அவல நிலையே நீடிக்கிறது. இதே நிலை தான் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் இருக்கிறது.

இந்த காரணத்தினாலேயே தாய்மார்கள் குழந்தைகளோடு வெளியே வரும் போது பாதுகாப்பான இடம் இன்றி கூச்சப்படும் நிலை உள்ளது. இதனால் தமிழக அரசு, பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறந்தது போல், அடுத்தகட்டமாக மாவட்ட வாரியாக முக்கியமான சுற்றுலாத் தலங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தினால் உபயோகமாக இருக்கும்.


நண்பர்களுடன் பகிர :